புனிதா்களின் சரிதை

மனித வாழ்விற்கான அழைப்பு தூய வாழ்விற்கான அழைப்பு ஆகும். ஒரு நல்ல மனிதன் மெய்யாகவே புனிதனாக இருக்கிறான். இறைநம்பிக்கை, மனித வாழ்வைப் புனித வாழ்வாக மாற்றுகிறது. தந்தையாம் கடவுளின் மாட்சியை தரணிக்குத் தந்த ஒரே மகனாம் இயேசுவை அறிந்து, அனுபவித்து, வாழ்வாக்கி, சான்று பகர்ந்து வாழ்வது தான் அருள் வாழ்வு அல்லது புனித வாழ்வு ஆகும். இயேசுவின் மீது பற்றுக்கொண்டு அவருடன் சேர்ந்து நிற்க விரும்பியவர்களே புனிதர்கள். புனிதர்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சுவடுகளில் நடந்தவர்கள். இருளிலும் துயரிலும் தட்டுத்தடுமாறி, பலவீனங்களில் வீழ்ந்தும் எழுந்தும், காடு மேடு, பள்ளங்களைக் கடந்தும், கிறிஸ்துவின் ஒளியாக வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்கு நற்சான்று நல்கியவர்கள். இவர்களை நமது வாழ்க்கையில் முன்மாதிரியாகப் பெற்ற நாம் எவ்வளவோ பேறு பெற்றவர்கள். புனிதர்கள் இவ்வுலகில் நம்மை விட்டு மறைந்தாலும், நம் அகவாழ்வில் மறையாமல் நம்மிடையே அருள்மாரி பொழிகின்றவர்கள். ‘புனிதர்களின் சரிதை’ தினந்தினம் வாசித்துப் பின்பற்றுவது மேன்மை மிக்கச்செயல்.


அனைத்து புனிதர்களும் கிறிஸ்துவின் அன்பினின்று எதுவும் என்னைப் பிரிக்க முடியாது என்று துணிந்து, நம்பிக்கையின் ஒளியில் வாழ்ந்த இவர்கள், தளர்வடைந்து, எதிர்நோக்கிழந்து, நிலைகுலைந்து நிற்கின்ற மானிட சமூகத்திற்கு முன் மாதிரிகள். கிறிஸ்தவன் ஒருவன் தன் நம்பிக்கையைக் காக்க தன்னுயிரைக் கொடுக்கத் துணிவது இவ்வுலகில் தான் பிறந்த பயனை அடைவதாகும் எனப் பறைசாற்றியப் (புனித பங்கிராஸ்) புனிதர்களையும், நம்பிக்கையுடன் திடமூட்டி பலரைக் கிறிஸ்தவர்களாக்கியப் (புனித செபஸ்தியார்) புனிதர்களையும், துன்பங்கள் நம்மை இறைவனோடு இணைக்கும் என்ற நம்பிக்கையில் தியாகத்தின் மலராக வாழ்ந்து காட்டியப் (புனித அல்போன்சா) புனிதர்களையும், செபத்தை ஆயுதமாகக் கொண்ட (புனித பெர்னதெத்) புனிதர்களையும், நம்பிக்கையோடு தூய வாழ்க்கை வாழ்ந்து, கிறிஸ்துவுக்காக துன்பங்கள் அனுபவித்து உயிர்கொடுத்த ‘புனிதர்களின் சரிதை’ நமக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.


நீதியின் கதிரவனாகிய இயேசுவைத் தனதாக்க, துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், நெருக்கடிகள், இன்னல்கள், இக்கட்டுகள் ஆகியவற்றை இனிதாய் ஏற்று, அகிலமெங்கும் விண்ணரசைக் கட்டியெழுப்பிட இயேசுவின் உள்ளத்தையும், உணர்வுகளையும், எண்ணங்களையும், எதிர்நோக்குகளையும், பண்புகளையும், பணிகளையும் உள்வாங்கி வாழ்ந்தவர்களே புனிதர்கள். புனிதர் என்றால் பாவங்களிருந்து விலக்கப்பட்டு, கடவுளின் அருட்பொழிவு பெற்றவர் ஆவார். இவர்களின் எடுத்துக்காட்டான, தூய்மையான வாழ்க்கை நமது நம்பிக்கையை ஆழப்படுத்தும். நம்மையும் புனிதர்களாக மாற்றும். மாறுபட்ட இன்றைய உலகில் சிறுவர்களின் வாழ்வைச் செதுக்கவும், வளரும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாகவும், துன்ப துயரங்களில் மூழ்கியிருப்பவர்களுக்கு ஆறுதலாகவும், அறச்செயல்களை ஆர்வமுடன் முன்னெடுப்பவர்களுக்குத் துணிச்சலூட்டும் நல்ல எதிர்நோக்காகவும் ‘புனிதர்களின் சரிதை’ துணைப்புரியும். புனிதர்களின் வாழ்வு மாபெரும் புனிதர்களை உருவாக்கியிருக்கின்றது. குறிப்பாக, இயேசு சபையை ஏற்படுத்திய புனித இஞ்ஞாசியாரின் மனமாற்றத்திற்கு வித்திட்டது ‘புனிதர்களின் சரிதை’ என்னும் நூலே.


திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர் ‘நம்பிக்கையின் வாயில்’ என்ற திருத்தூது மடல் “முத்திப்பேறு பெற்றவர்களும் புனிதர்களும் நம்பிக்கையின் உண்மையான சாட்சியங்கள். நவீன சமூக தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி தலத்திருச்சபையின் புனிதர்களைப்பற்றிய அறிவைப் பரப்புவது பயனளிக்கக் கூடியது. புனிதர்கள் காலதாமதமின்றி வர இருக்கும் ஆண்டவருக்காக கீழ்ப்படிதல், ஏழ்மை, கற்பு ஆகியவற்றைக் கடைபிடிப்பதற்காக இவ்வுலகத்தின் இன்பங்கள் அனைத்தையும் துறந்து, புனிதமான அர்ப்பண வாழ்வை ஏற்றதும் நம்பிக்கையால்தான்” என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நம்பிக்கையோடு புனிதமான வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய புனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகளை ஒன்றாக இணைத்து ‘புனிதர்களின் சரிதை’ என்ற தலைப்பில், நவீன சமூக தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி தலத்திருச்சபையின் புனிதர்களின் சரிதை வழியாக இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி பணிகளை பரப்புவது பயனளிக்கக் கூடியது. வெளியிடத் தூண்டுதலும், ஆர்வமும் நல்கிய இறைவனுக்கு இருகரம் கூப்பி நெஞ்சார்ந்த நன்றியின் தியாக மலர்களை அர்ப்பணமாக்குகிறேன்.

Generic placeholder thumbnail
Rev.Mother Rose Francis DM
Provincial Superior
Generic placeholder thumbnail
Rev.Sr.Mary Anand DM
Chief Editor